Monday, 24 September, 2018
ரோக நிதானம் I

Part-1  Part-2  Part-3  Part-4  Part-5  Part-6  Part-7  சுரங்கள் உண்டாவதற்குக் காரணம் :- உண்ணும் உணவின் அளவு, காலம், பக்குவம்முதலியவற்றின் பேதத்தாலும், நீரின் குற்றத்தாலும், பருவகால வேறுபாட்டாலும், மழையில் நனைதல், வெய்யிலில் காய்தல், பகலில் தூங்குதல், இரவில் கண்விழித்திருத்தல், பதினான்கு வேகங்களை அடக்கல், மலச்சிக்கல், மிகுபோகம், கோபம், தாபம், பயம் முதலியவற்றாலும், அடிபடுதல், விஷம் தீண்டல் முதலிய புறக்காரணங்களினாலும் பழைய வினையினாலும் சுரம் வருமெனக்கூறப்பட்டுள்ளது.

சுரத்தின் இலக்கணம் :- முன்கூறிய உணவாதிபேதம், தகாத நடத்தை முதலியகாரணங்களினால் வாதாதி தோஷங்கள் தண்ணிலை மாறி முதலில் ஆமஸ்தானத்தைப்பற்றி, அக்கினியை மந்தப்படுத்தி, பின்னர் இரச தாதுவில் பரவி உடலில் வெப்பத்தை யுண்டாக்கி சுரம் என்னும் இந்நோயைப் பிறப்பிக்கின்றது. இது எப்பொருளினும் விருப்பமின்மை, தேகபாரிப்பு, நிறம் மாறல், உடல் சிலிர்ப்பு, தேக காங்கை, நாவறட்சி, மந்தம், அரோசகம், மலச்சிக்கல், தலை, இடுப்பு, கைகால் முதலிய விடங்களில் வலி, அசதி முதலிய குணங்களைத் தன் பொது இயல்பாய் பெற்றிருக்கும்.


சுர வகை :- சுரமானது வாதசுரம், பித்தசுரம், கபசுரம், வாத பித்தசுரம், வாதகபசுரம், பித்தகபசுரம், சந்நிபாதசுரம் என ஏழு வகைப்படும் எனசிலரும், தோஷங்களின் செயலின்றி அடிபடுதல் முதலிய புறகாரணங்களினால் ஏற்படும் ஆகந்துசுரம் என்ற ஓர் வகையையும் இத்துடன் சேர்த்து சுரம் எண் வகைப்படும் எனச் சிலரும் கூறுவதுண்டு. இது நிற்க சுரம் 64-வகைப்படும் எனவும் இன்னும் சில நூல்களில் 276 வகைகள் என்றும் கூறப்பட்டுள்ளது. இவைகள் யாவும் வீண்பெருக்கமும் அத்யாவசியமானதண்றென்பதும் சிலரின் துணிபு. எனினும் மேற்கூறிய எண்வகைகளையும் அவைகளின் பிரிவுகளையும் முதலில் கூறிவிட்டுப் பின்பு மற்ற வகைகளைக் கவனிப்போம்.

வாத சுரம் :- உருப்புகளில் குத்தல், கண்களிலிருந்து சலம்வடிதல், மார்பு துடித்தல், உடலில் வெப்பம், சிலசமயம் குளிர், மலச்சிக்கல், மூத்திரம் உஷ்ணமாய் வறண்டு இருத்தல், கீல்களில் வலி, வயிற்றுப்புசம், முகம் மினுமினுத்துக் காணல், வாந்தி, இடுப்பில், வலிவின்மை, கைகால் அசதி, வாயினித்தல், புளிப்புச் சுவையுள்ளப் பொருட்களில் இச்சை முதலிய குணங்கள் உண்டாகும்.

பித்தசுரம் :-
பிதற்றல், மேல்மூச்சு, தலைநோய், அதிகதாகம் வயிற்றுவலி, கோழை, அருசி, வாய்கசப்பு, தேகம் மிகச்சூடாயிருத்தல், மூத்திறம் செந்நிறமாய்கடுத்துவிழல், மயக்கம், நடுக்கம் கண்சிவந்து காணல், உடலில் எரிச்சல், வாந்தி முதலிய குணங்களை உண்டக்கும்.

சிலேத்துமசுரம் :- கண்களில் நீர் வடிதல், கண்டத்தில் கோழை கட்டல், பெருமூச்சு, விக்கல், இருமல், தாகம் அரோசகம் நடுக்கல், வாயில் உப்புச்சுவைத் தோன்றல், மூத்திரம் அதிகமாய் போதல், தலைநோய், இரைப்பு, சரீரசந்திகளில் நோய், உணர்வு விருப்பமின்மை, முகம், நா, உடல் வெளுத்துகாணல், அற்ப வியர்வை முதலிய உண்டாகும்.

வாத பித்தசுரம் :- கண், மார்பு, கண்டம், இவைகளில், எரிச்சல், தலைவலி, வாந்தி, பெருமூச்சு, நாகம், நாவளரல், அருசி, நீலநிறம்,சாம்பல்நிறமாயிருத்தல், வயிற்றுப் பொருமல் உடல் உளைச்சல் முதலிய குணங்கள் உண்டாகும்.

வாதசிலேத்துமசுரம் :- உடலில் பிசுபிசுப்பு, வாயில் உப்புச் சுவை, தலைவலி, தேகம் முழுவதும்குத்தல், குடைச்சல், கண்களில் நீர் வடிதல், வாந்தி, நாசியில் சலம் வடிதல், பெருமூச்சு, அதிதாகம், தூக்கமின்மை, பசியின்மை, மூத்திரம் நுரையுடன் வீழல், இருமல் கீரல்களில்வேதனை, சயித்தியம், முதலியகுணங்கள் உண்டாகும்.

பித்தசிலேத்துமசுரம் :- உடலானது ஸ்தம்பித்து மரத்தல் மார்பிலும், பிடரியிலும் வலி, தலைபாரம், அற்ப்ப இருமல், நடுக்கல் வாய் கசகசப்பாயும், உப்புச்சுவையாயும், அருசியுமா யிருத்தல், பித்தம் கால்களில் எரிச்சல், கண்டத்தில் கோழை கட்டுதல், தூக்கமின்மை, வாந்தி, மூத்திரம் வெண்மையாகவும், சிவப்பாகவும் முதலிய குணங்கள் உண்டாகும்.

சந்நிபாதசுரம் :- தேகமானது ஒருசமயம் வெப்பமாகவும் சமயம் சீதளமாயிருத்தல், கீல்களிலும், சிரசிலும் வெப்ப முண்டாதல் கண்களில் இமையொட்டிக்கொள்ளல், கண்ணில் வெப்பத்துடன் குத்தல், நாவில் நீரின்றி முட்கள் உண்டாதல், அருசி,மல மூத்திரங்கள் பத்திந்து கொஞ்சமாக வெளிவருதல், நாளுக்கு நாள் தேகம் மெலிதல் கண்டத்தில் கோழை கட்டல், சதா குறுகுறுப்பு, இருமல், கருப்பு சிகப்பாகவும் இருத்தல், ஊமை போல் யிருத்தல், உருப்புகளில் வலிவின்மை, தூக்கமின்மை, பசியின்மை, விக்கல், சுவாசம், சித்தபிரமை, முதலியன உண்டாகும். இதனை சந்நிபாதம் அல்லசந்நி எனவும் கூறுவர்.

 

சந்நிபாத சுரவகைகள் :- சந்நிபாதசுரமென்ற சந்நி நோயைப் பதிமூன்று வகைகளாக வகுக்கப்பட்டுள்ளது. அவையாவன :-

1. கண்டகுப்ச சந்நி :- கண்டத்தை குறுக்கி பிடிப்பதுபோலிருத்தல், பிதற்றல், தாகம், வாய்வு அதிகரித்தல், பிரமை, தேகம் கனத்தல், அலறி எழுந்து ஒடி விழுதல், நடுக்கல், மூர்ச்சை, இரைப்பு, தலைநோய், காதில் நோயுடனிரைச்சல் என்னும் இக்குணங்களையுடையது. இது கடினசாத்தியம்.

2. சந்நிக சந்நி :- கீல்களில் நோய், வாயில் நீங்காத கபம், இருமல், வயிற்றுவலி, ஆயாசம், தேகத்தில் எரிச்சல், தாகம் அற்ப பிரமையென்னும் குணங்களை யுடையது. இது சுகசாத்தியம்.

3. தாந்திரிக சந்நி :- அதிக அசதி, பெருமூச்சி விடுதல், சரீர மெரிச்சல், பேதி, ஆயாசம், தொண்டைக்குள் காரல், காது மத்திபம், நாக்கு முள்ளுபோலிருத்தலோடு கறுத்தல், தேகத்தில் அதிக காங்கை, அரோசகம், சதா மூக்கில் சலம் வடிதல், அற்ப வயிற்று வலி என்னும் இக்குணங்களை யுடையது. இது சுகசாத்தியம்.

4. புக்னநேத்திர சந்நி :- கண்கள் கம்மலோடு கலங்கி சிவந்திருத்தல், இமைகள் ஒட்டிகொள்ளுதல், தொடைசதை, சிரசு, விலாபக்கம் எலும்புகள், கீல்கள் இவைகளில் நோய், பிரமை, இரைப்பு, பிதற்றல், நடுக்கல் என்னுங் குணங்களையுடையது. இது அசாத்தியம்.

5. ருத்தாக சந்நி :- அவயங்களில் அதிகநோய், உடம்பெரிச்சல், காங்கை, கண்டத்தினுள் நோயுடன் தினவு, பிரமை, சோர்வு, பிரசாலப்பேச்சு, தாகம், பேதிஎன்னும் குணங்களையுடையது. இதில் சரீரமுழுதும் நோயும் எரிச்சலும் உண்டாகும். இது அசாத்தியம்.

6. ஜிம்மக சந்நி :- நாவு விகுத்தலோடு முள்ளுமுள்ளாக யிருத்தல், இரைப்பு, இருமல், துர்ப்பலம், மலசலவிபரீதம், தொண்டையினுள்ளே ஒரிவித அருவருப்பு, காது மத்திபம், வாய்பேசக்கூடாமை என்னும் குணங்களையுடையது. இது மிகவும் கடின சாத்தியம்.

7. பிரலாப சந்நி :- அதிகமாகப் பிதற்றல், உடம்பெரிச்சலுடன் மிகுவேதனை, மனோசிந்தனை, முன்கால்வீங்கி நோதல், நடுக்கல், மாறு பாடான புத்தி என்னும் குணங்களையுடையது. இது அசாத்தியம்.

8. அந்தக சந்நி :- தாகம், சோர்வு, தலைநோய், விக்கல், சரீரமுழுதும் உதறல், எரிச்சல், மலபந்தம், அக்கினிமந்தம், இரைப்பு, உப்பிசம், பிரமை என்னுங் குணங்களையுடையது. இது அசாத்தியம்.

9. ரக்திஷ்டீவி சந்நி :- ரத்தம் ரத்தமாககக்கல், வாந்தி, பிரமை, தாகம், பேதி, அற்பசுவாசம், விக்கல், ஞாபகபங்கம், சரீரத்தில் அதிககாங்கையோடு நோய், தேகமுழுதுங் கறுப்புகறுப்பாகத் தடித்தல், ரத்தப்புடை என்னும் குணங்களையுடையது. இது அசாத்தியம்.

10.சித்தவிப்ரமசந்தி :- பிரமை, சோர்வு, மதம், உடம்பெரிச்சல் பரியாசம், பண்ணுதல், பாடல், ஆடல்,சரீரநோய், பிதற்றல், கீல்களெல்லாம் முறிதல் போலிருத்தல், இரண்டுபக்கம் இடுப்பை அடிக்கடி பார்த்தல், பயத்துடன் திரும்பி திரும்பி விழுதல், என்னும் இக்குணங்களுடையது, இது கடின சாத்தியம்.

11. சீதாங்கசந்தி :- சரீரமுழுவதும் மிகசீதளத்தோடு நோய் ருரற்கம்மல், அடிக்கடி ஓக்காளம், பேதி, விக்கல், இரைப்பு, பலவீனம், என்னும் குணங்களுடையது, இது அசாத்தியம்.

12. கர்னிகசந்தி :- காதின் மூலத்தில் வீக்கத்துடன் சத்தம் கேளாமை, வாய் திறக்கமுடியாமல் கண்டத்தை யிருக்கி பிடித்தல் போலிருத்தல், உடம்பெரிச்சலுடன் நடுக்கல், வயிருகொதித்தல்,பிதற்றல், மார்பு இடித்தல், இரைப்பு, இருமல் என்னும் குணங்களுடையது, இது மிகவும் கடின சாத்தியம்.

13. அபிநியாச சந்தி :- பசிநீங்குதல், முகத்தில் பளபளப்பு, பேச்சில்லாமை, துர்ப்பலம், பஞ்சேத்திரிய தன்மை குறைவு, மயக்கிய நித்திரை, அறிவின்மை, சுய உணர்வின்மை, என்னும் குணங்களுடையது இது அசாத்தியம்.

மேற்கூறிய பதிமூன்று சந்நி பாத சுர வகைகள், மாதர்களுக்கு சூதககாலத்தில் கண்டால் சூதகசந்நி என்றும், கருப்பகாலத்தில் கண்டால் கருப்பசந்நி என்றும், விரணத்தினால் கண்டால் விரணசந்நி என்றும், பெயர் பெரும். சந்நியின் பொது குணங்களுடன் முகத்தில் விகாரம் உண்டானால் முகசந்நி என்றும், திரிதோஷத்தால் உண்டானால் திரிதோஷசந்நி என்றும், அலறி அலறிவிழுவதனால் அலறு சந்நி என்றும் சில விடன்ங்களில் வழங்கப்படுகின்றன.

சந்நி பாதசுரங்களின் வயது :- சந்திகத்துக்கு (நாள் 7) அந்த கத்துக்கு (நாள் 10) ருத்தாகத்துக்கு (நாள் 20) சித்தவிப்பிரமாத்துக்கு (நாள் 18) சீதாங்கத்துக்கு (நாள் 15) தாந்ரீகத்துக்கு (நாள் 25) கண்டகசுப் சகத்துக்கு (நாள் 13) கர்னிகத்துக்கு (நாள் 18 ) லாபத்துக்கு (நாள் 14) ஜிம்மகத்துக்கு (நாள் 15) அபிநயாத்துக்கு (நாள் 15) சில சந்நி பாதங்கள் உண்டானதும் கொல்லும், சிலது கடைசியிலும் கொல்லும்.

முன்பு கூறிய சந்நி பாதசுரங்கள் அல்லாமல் தாகபூர்வ சந்நி பாதசுரம், சீதபூர்வசந்நி பாதசுரம், என இருவகை சந்நிகள் உண்டடென்றுஞ் சிலர் கூறுவர். சுகசந்நி என்ற ஓர் வகையும் வழக்கில் காணப்படுகிறது.

ஆகந்துக சுரம் :- நரம் உண்ணும் அன்னபானாதிகளாலன்றி வேறு புறகாரணங்களினால் உண்டாகும் சுரங்களுக்குப் பொது வாய் ஆகந்துக சுரமெனப் பெயர். இது நான்கு வகைப்படும்.

அவையாவன :-

1. அபிகாத சுரம் :- காயங்களினாலும் இரணங்களினாலும் நெருப்பினிடத்தே நடத்தும் தொழில்களினாலும், அதிக நடை அடிக உழைப்பு இவைகளினாலும் உண்டாகும் சுரத்திற்கு அபிகாத சுரமெனப் பெயர். முதலில் வாயுவானது உடலில் நீக்கமற நிறைந்து அதிகரித்து ரத்தத்தைக் கெடுத்து சர்வாங்க நோயை உண்டாக்கும். உணவு முதலிய சாந்த சிகிச்சையால் நீங்கும்.

2. சாபச் சுரம் :- இது பெரியவர்களின் சாபத்தினால் உண்டாவதால் அதிக உக்கிரமாகவும் சந்நிபாதசுரகுணங்களையு முண்டாக்கும். தேவ ஆராதனை, பூசை, அன்னதானம், பெரியவர்களின் ஆசி முதலியவைகளால் நீங்கும்.

3. அபிசார சுரம் :- இது உச்சாடண மாரண ஹோமங்களினால் ஆச்சரியமான கொப்புளங்கள் தேகமுழுதும் தோணும். சந்நிபாதசுர குணங்களிருக்கும். இதுவும் சாபசுரமும் மிகவும் கொடியது. இதை மணிமந்திர ஓளஷதங்களால் நிவர்த்திக்கலாம்.

4. அபிஷங்க சுரம் :- இது சேர்க்கையால் வரும் சுரம். இது ஏழு வகைப்படும். அவைகளாவன :-

1. பூதாவேச சுரம் :- அதிக சுரம், காரணமின்றி நகைத்தல், அழுதல், கண்ணையுருட்டி விழித்தல், தேகங்கறுத்தல், பிரலாபம், அதிதிண்டி, சகல பதார்த்தங்கள்மீது விருப்பம், ஆடல்பாடல், உரோமச்சிலிர்ப்பு, நித்திரை, எரிச்சல், நளிர், தலைநோய், கண் சிவத்தல், வாந்தி, விக்கல், சுவாசம், பலவீனம், ஏப்பம், கொட்டாவி, பிரமை, மனோவேதனை, தொண்டைமுதல் பாதம் வரையிலும் வியர்வை, சர்வாங்க சீதளம், ஈனத்தொனி, திரிதோஷங்களின் விருத்தி என்னுங் குணங்களையுடையது. இது புகை முதலிய சிகிச்சைகளினால் சாந்தப்படும்.

2. அவுஷத கந்தக சுரம் :- இரசம், கந்தகம், பாஷாணம், சேங்கொட்டை முதலிய மருந்துகளின் புகை அல்லது நஞ்சினால் சுரம் உண்டாகி மூர்ச்சை, தலைநோய், தேகவீக்கம், தும்மல், அதிக தாகம் என்னும் குணங்களை யுண்டாக்கும். இதற்கு விஷப்பிரதி விஷ சிகிச்சை சிறந்தது.

3. விஷ சுரம் :- இது விடங்களினால் ஏற்பட்டு மூர்ச்சை, பேதி, எரிச்சல், முகங் கறுத்தல், மார்புநோய், அதிகசுரம் திரிதோஷக்கோபம் என்னுங் குணங்களையுடையது.

4.கோபச்சுரம் :- இது தலைநோய், உடம்பு பதைத்தல், அதிகசுரம், பித்தகோபம், என்னும் குணங்களுடையது. இதற்கு பித்தகோபத்தை சமன்படுத்தும் மருந்துகளை யீதல் நன்று.

5. பயச்சுரம் :-
சுரம், அடிக்கடி பயப்படல், புலம்பல் வியர்வை, எரிச்சல், கண்கள் சிவத்தல், பலயீனம், சிரசிலும்,கண்ணிலும் நோய், நித்திரை பங்கம், தலை சுழலல், கவாசம், சூலை, உரோமச் சிலிர்ப்பு, சயித்தியம், மார்பிலும், இடுப்பிலும், தடித்தல், பற்கடித்தல் என்னும் குணங்களையுடையது.

6. துக்கசுரம் :- வாயில் வந்தபடி யெல்லாம் பிதற்றல், அதிக சுரம், அழுதல் என்னும் குணங்களையுடையது.

7. காமசுரம் :- மிகு சுரம், புத்தி, வெட்கம், நித்திரைகளின் கெடுதி, மோகம், ஆண்குறி, தொப்புளின் கீள்ஸ்தானம்,புருவம் நெற்றி இவைகளில் எரிச்சல், சையோத்திலிச்சை, புன் சிரிப்பு, அதிகதாகம் கண்சிவந்தல், என்னும் குணங்களையுடையது.

இந்த ஏழுகைச்சுரமும் சரீரசுரம், மானுளிகசுரம், என இரு வகையுள் அடங்கும். மற்றும் சுரங்களை சரீராதி சுர பேதங்கள் என 12 வகையாகக் கூறப்பட்டுள்ளன.

1. சரீராதி சுர பேதங்கள் :- சரீரத்தில் தபித்தலை யுண்டாக்கி சுரம் வரும். இதற்கு சரீரசுரம் என்று பெயர்.

2. முதலிய மனதை தப்பிக்கச்செய்து பிறகு சுரங்காணும் இதற்கு சரீரசுரம் என்று பெயர்.

3. இது முதலில் காந்தமாகப் பிறகு சுரத்தின் குறி குணங்களை யெல்லாம் உண்டாக்கும். இதற்கு சௌமிய சுரம் என்று பெயர்.

4.இது ஆரம்பத்திலேயே அதிக உக்கிரமாக கண்டு நாளடைவில் காய்ச்சலுக்குண்டான குணங்களை பெற்றிருக்கும். இதற்கு தீஷக சுரம் என்று பெயர்.

5. இது முதலில் வயிற்றில் அதிக சங்கடம் ,மல பந்தம், முதலிய உள் வேதனைகளை உண்டாக்கி பிறகு சுரக்குணங்களை உண்டாக்கும்.  இதற்கு உட்சுரம் என்று பெயர்.

6. சப்த தாதுக்களை பாதிக்காமல் சர்மத்தின் மேல் திடீரெனக் கண்டு சிலநேரத்தில் தோஷமென்றும் இல்லாமல் போய் விடும். இதற்கு வெளிச்சுரம் என்று பெயர்.

7. வருஷருதுகாலமாக ஆவணி புரட்டாசி மாதங்களில் பித்தசுரம் போலும், சித்திரை, வைகாசி மாதங்களில் கபசுரம்போலும் காணும். இதற்கு பிராகிருதசுர மென்றுபெயர்.

8. மாசி, பங்குனி மாதங்களில் வாதசுரம்போலும் ஆனி ஆடி மாதங்களில் பித்தசுரம்போலும், மார்கழி, தை மாதத்தில் சிலேத்துமசுரம்போலும் காணும். இதற்கு வைகிருத சுரமென்று பெயர்.

9. மேற்கூறிய பிராகிருத சுரங்கள், வைகிருத சுரங்கள் உண்டான போது அவைகளின் குணங்களும், மிகுதாகமும், மிகுநித்திரையும், சந்நிபாத சுரலக்ஷணங்களும் இல்லாமலிருந்தால் அதற்கு சாத்தியச் சுரமென்று பெயர்.

10. சப்த தாதுக்களில் பிரவேசித்து நெடுநாளாக நீங்காமல் சந்நிபாத சுரலக்ஷணமுழுதும் உண்டாக்கிய சுரமும், காலை மாலை கடுமையுடன் உண்டாக்கிய சுரமும், தேகபலத்தையும் மாமிசத்தையும் குறைத்து கோழை விழும்படி உண்டாக்கிய சுரமும் அசாத்திய சுரமாம்.

11. சுரங்களுக்கிருக்கிற இரைப்பு, மூர்ச்சை, பிரமை, ஒக்காளம், தாகம், பேதி, கொட்டாவி, விக்கல், சரீரவேதனை, மலபந்தம் என்னும் இப் பத்து அவஸ்தைகளுடன் இளைப்பு, அடிக்கடி நீரிறங்கல், மலபந்தம், அக்கினிமந்தம், அசீரணபேதி, அதிககசீதம் விழுதல் வயிற்றுநோய், நடுக்கம், தாகம், கைகால் குளிர்ச்சி, கபாதிக்கம், நித்திரை பங்கம், கண்களில் ஜலம்வடிதல் என்னும் இக்குணங்களை யுடையது. இதற்கு சாமச்சுரம் என்று பெயர்.

12. ஆமாசயக் கெடுதியால் புசிக்கும் அன்னம் சீரணியாமல் இந்நோய் ஏற்பட்டு சுவாசம், இருமல், அசீரணம், வாதகபங்கள் கூடிய சுரம், துர்ப்பலம், சிரோபாரம், தேகஞ் சுருங்கல், கண்டத்திலும் நெற்றியிலும் வியர்வை, கண்சிவத்தல், நாவறளல் என்னுங் குணங்களையுடையது. இதற்கு நிராம சுரமென்று பெயர்.

13. வாதாதி :- தோஷமானது சப்த்தாதுக்களைப் பற்றி உண்டாகி சுரம்விடுகிற தருணத்தில் மீண்டும் முன்போல் சுரக்குணங்களெல்லாம் பிறக்கும். இதற்கு முக்கியமானசுரம் என்று பெயர்.

இனி விஷமசுரம், சந்தாதி சுரம் என்ற இருவகைகளையும் அவற்றின் பிரிவுகளையும் கூறப்படும்.

விஷம சுரம் :- நெடுநாளாக சுரமானது உள்ளுக்குள்ளே விஷமித்ததால் முன்மூன்று நாட்களுக்கொவ்வொரு தாதுக்களைப்பற்றி விஷமசுரங்களை உண்டாக்கும். இதனைத் தாதுகதசுரம் எனவுங் கூறு வர். இது எண்வகைப்படும்.

அவைகளாவன :-

1. ரச தாதுகத சுரம் :- அதயிரியம், அரோசகம், வாந்தி, வாயில் சலமூறல், சரீரமெல்லாம் நோயுடன் கனத்தல், பெருங் கொட்டாவி, முகவிகாரம், பலவீனம், ரோமச்சிலிர்ப்பு என்னுங்குணங்களை யுடையது. இந்த சுரம் ஏழு நாளைக்குப் பிறகு ரக்த தாதுவில் அனுசரிக்கும்.

2. ரக்ததாதுகத சுரம் :- மேற்கூறிய குணங்களுடன் உமிழ் நீரில் இரத்தம்வீழ்தல், தாகம், உடலெல்லாம், சிவந்ததடிப்பு, தேகம் சிவத்தல், நெற்றி இடித்தல், கீல்களெல்லாம் நோதல், நாக்கு வழு வழுப்புடன் மஞ்சள்நிறமாயிருத்தல், நெஞ்சில் கபாதிக்கம், நித்திரை, மலபந்தம், பேதியுடன் சீதக்கழிச்சல் என்னும் குணங்களையுடையது. இந்தசுரம் 21-நாட்களுக்குமேல் மாமிசதாதுவைப் பற்றும்.

3. மாமிசதாதுகத சுரம் :- கண்களில் இருள்கம்மலுடன் நீர் கம்மல், வாந்தி, வாய்நாற்றம், அசதியால் கைகால்களை தூக்கிப் போடுதல், தேகத்தில் எதுவோ பூசினதுபோல் வரவரப்பாயிருத்தல், மினுமினுப்பு, வயிற்றில் உப்புசத்துடன் நோய் மற்றுஞ் சுரங்களுக்குரிய குணங்கள் என்பவைகளையுடையது. இந்தசுரம் 2-மாதம் வரையிலும் போராடி பின்பு மேதோதாதுகதசுரமாய் மாறும்.

4.மேதோதாதுகத சுரம் :- மேற்கூறிய சுரகுணங்களுடன், பரிமளவாசனையில் இஷ்டமில்லாமை. சிரோவேதனை, தலைபுறட்டல், நடுக்கல், கண்ணோயுடன் சலம்வடிதல், அக்கினிமந்தம், சலமருந்தினும் சீரணமாகாமை என்னும் குணங்களையுடையது. இந்த சுரம்  ஐந்துமாதத்திற்குமேல் அஸ்திதாதுகதசுரமாக மாறும்.

5. அஸ்திதாதுகத சுரம் :- இரத்தநரம்பு, சன்னநரம்பு, எலும்பு கீல் இவைகளின்நோய், தேகம் வெளுத்து பஞ்சைபோல் மெலிந்து இருத்தல், ஒருவேளை சீதளம், அடிவயிற்றில் நோய், முதலியவற்றுடன் சுரத்தின் குணங்களையும் உடையது. இந்த சுரம் இரண்டு
வருடஞ் சென்ற பிறகு மச்சதாதுகதசுரமாய் மாறும்.

6.மச்சதாதுகத சுரம் :- தோஷாதிக்கம், மேல்மூச்சி, கீழ் மூச்சி, கண்டத்தில் குறுகுறுவென்ற சத்தம், உள்ளே எரிச்சல், வெளியிற் குளிர்ச்சி, தேகஞ்சுட்கித்தலுடன் :பாதை, தொடை, முழங்கால் இவைகளின் கீழ் வேதனை, பிராணவாயுவும் அபானவாயும் தம்பித்தல் என்னும் குணங்களையுடையது. இந்த சுரம் மூன்று
வருடத்திற்குப் பிறகு சுக்கிலதாதுகதசுரமாய் மாறும்.

7.சுக்கிலதாதுகத சுரம் :-
கண்களிலிருள் கம்மல், புருவம், உச்சி, கண்டம், மார்பு, உந்தி, உதடு, பீஜம், முழங்கால், கணுக்கால், இடுப்பு, காலின் பெருவிரல், சுற்றுவிரல், தோள் என்னும் பதினான்கு ஸ்தானங்களின் வேதனை, ஆண்குறி சுருங்கல், இந்திரிய ந்ட்டம், அதிகநித்திரை, ஞாபகமறதி மற்றும் சுரத்தின் அந்திய குணங்கள் முதலியவைகளை உடையது.

மேற்கூறிய ரசம், ரத்தம், மாமிசம், மேதை, அஸ்தி என்னும் ஐந்து தாதுக்களைப்பற்றிய தாதுகத சுரங்கள் கஷட சாத்திய மச்சையையும் சுக்கிலத்தையும்பற்றிய தாதுகதசுரங்கள் மிகவும் அசாத்தியம் என்றறிக.

8. சருமதாதுகத சுரம் :-
சரீரத்தின் மேல் காய்தல், நாடிமந்து மாநடத்தல், தலைநோய், சலத்தில்விருப்புடன் தாகம், தேகம் வெளுற்றல், பிரமையாகப்பேசல், எரிச்சல், வாய் நீரூரல், மயக்கம் என்னும் குணங்களுடையது.

சந்ததாதி சுரம் :- இது திரிதோஷ பேதங்களினாலும், ஆறு கால மாறுபாட்டினாலும் பிறப்பதாகும், இதனை சீதசுரம், குளிர் சுரம், முறைக்காய்ச்சல் எனவுங் கூறுவர். இது ஆறு வகைப்படும்.

அவையாவன :-

1.சந்தத சுரம் :- இது இரச தாதுவைப்பற்றி நின்று இரவும் பகலும், விடாது தொடர்ந்து சுரங்காய்தல் என்னும் குணங்கள் உடையது.

2.ஏகாதிகசுரம் :-
இது இரத்த தாதுவைப்பற்றி நின்று பகலில் ஒரு முறையும், இரவில் ஒரு முறையும், சுரங்காய்தல் என்னும் குணங்கள் உடையது.

3. துவியாதிக சுரம் :- இது மாமிச தாதுவைப்பற்றி நின்று இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுரம் வருதல் என்னும் குணங்கள் உடையது.

4. திரியாதிகசுரம் :- இது மதோதாதுவைப்பற்றி நின்று மூன்று நாட்களுக்கு ஒரு முறை சுரம் வருதல் என்னும் குணங்கள் உடையது.

5. சதூர்த்திகசுரம் :- இது மச்சதாதுவைப்பற்றி நின்று நான்காம் நாள் அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை சுரம் வருதல் என்னும் குணங்கள் உடையது.

6. பஞ்சாகிக சுரம் :- இது அஸ்திதாதுவைப்பற்றி நின்று ஐந்தாம் நாள் அல்லலது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை சுரம் வருதல் என்னும் குணங்கள் உடையது.

64 வகை சுரங்களாவன :- வாத சுரம், பித்தசுரம், வாதபித்த சுரம், வாதகப சுரம், பித்தகப சுரம், சந்நி பாதசுரம், பூதசுரம், கோபசுரம், பயசுரம், காமசுரம், அபிசாரசுரம், அபிகாதசுரம், விஷமச்சுரம், சாமச்சுரம், நிராமச்சுரம், ரசதாதுகதசுரம், இரத்ததாதுகதசுரம், மச்சைதாதுகதசுரம், மதோதாதுகதசுரம், அஸ்திதாதுகதசுரம், மாமிசதாதுகதசுரம், சுக்கிலதாதுகதசுரம், துவியாகி சுரம்,திரியாகிசுரம், சாதூர்த்திகசுரம், பஞ்சாகிகசுரம், தெய்வபிரகோபசுரம், காந்தர்வசுரம், தாந்திரீகசுரம், மூர்ச்சைசுரம், பிரலாபசுரம், சீதைசுரம், வியர்வைசுரம், கிருமிசுரம், அரித்திரசுரம், உதயசுரம், மத்தியானசுரம்,மாலைசுரம், நசிசுரம், சோசைசுரம், விரணசுரம், ஆதபசுரம், ஈணத்தொனிசுரம், அக்கினிமந்தசுரம், ஏப்பசுரம், வாந்திசுரம், கொட்டாவிசுரம், விக்கல்சுரம், அநித்திரைசுரம், காசசுரம், சுட்கசுரம், புராணசுரம், பக்ஷ¡ந்திரசுரம், மாதசுரம், வருஷசுரம், கட்டிசுரம், அம்மைசுரம், நடுக்கல்சுரம், வீக்கசுரம், ஆநாகசுரம், திரிகாலசுரம், என்பவை களாம்.

இவற்றுள் வாதசுரம் முதலாய் பஞ்சாகிகசுர மீறாயுள்ள 28-வகைகளும் இதுவரையில் கூறியுள்ளவற்றிலே அடங்கி இருத்த லால் அவைகளைத்தவிர்த்து, எஞ்சிநின்ற ஏனைய 36-வகைகளை மட்டுஞ் சுருக்கமாக இனி யிங்கு கூறப்படும்.

தெய்வபிரகோப சுரம் :- தெய்வங்களின் குற்றத்தினாலுண்டாகி சிரோபாரம், வியர்வை, சர்வாங்கசீதள்ம், ஏப்பம், விக்கல், சடத்துவம், சூலை என்னுங் குணங்களையுடையது.

காந்தருவ சுரம் :- சர்வாங்கமும், சுருங்கல், கண்களில் மஞ்சள் நிறத்துடன் சலம்வடிதல், பலவீனம், அற்பசூலை, கீல்கள் அசையக் கூடாமை, பிரமை, கோபம், பசியில்லாமை, பெருமூச்சி, சயித்தியம், அடிக்கடி மூர்ச்சை, சர்வாங்கவீக்கம், கனவில் விந்து நஷ்டம், ஏப்பம், விக்கல், அடிக்கடி நீரிறங்கல் என்னும் இக்குணங்களையுடையது.

தாந்திரிக சுரம் :- தேகம் சுழன்றுவருவதுபோன்ற உணர்ச்சி\யுடன் வலி, பலவீனம், நெற்றியிலும், கழுத்திலும் வியர்வை, நாடி மெதுவாக அல்லது அதிவேகமாக நடத்தல் என்னுங் குணங்களையுடையது.

மூர்ச்சை சுரம் :- மூர்ச்சை, பலவீனம், தலைபுரட்டல், மிகு
வார்த்தை, ஒருவேளை பேசாமலிருத்தல், வாதாதிக்கம், கனத்தொனி, வாயிற் கசப்பு, கைகால் குளிர்ச்சி, இரத்த மூத்திரம் என்னுங் குணங்களையுடையது.

பிரலாப சுரம் :- பிரலாபம், சர்வாங்கவெளிறல், வாழைத்தண்டைப்போல் சீதளம், நகங்களில் உதிரமில்லாமை, நாக்கு மஞ்சள் நிறத்துடன் முட்போலிருத்தல், நெஞ்சுநோய், நெற்றியிலும், கழுத்திலும் வியர்வை என்னுங் குணங்களையுடையது.

சீத சுரம் :- கபாதிக்கம், வாந்தி, விக்கல், வியர்வை, பலவீனம், இருமல், இரைப்பு, மார்புநோய், தலைசுற்றல், நாடியுள்ளடங்கல், நாக்கு சிவப்போடு முட்போலிருத்தல் என்னுங் குணங்களையுடையது.

வியர்வை சுரம் :- மிகுவியர்வை, சுரக்குறிகள், தலையிலும் காதிலும் நோய், சோர்வு, கைகால்களில் மஞ்சள்நிறம், தலையில் சதாவேதனை, நாடியானது சூட்சுமத்திலும் வேகமான நடை, ஒரு வேளை தாமதநடை என்னுங் குணங்களையுடையது.

கிருமிச் சுரம் :- வயிற்றில் மிகுசூலை, உப்பிசம், ஏப்பம், வாந்தி, சுரக்குறிகள், வாயினாலும் அபானத்தினாலும் அளவற்ற பூச்சிகள் விழுதல், அக்கினிமந்தம், நித்திரைபங்கம், மனோதுக்கம், என்னும் இக் குணங்களையுண்டாக்கும்.

அரித்திர சுரம் :- சர்வாங்கத்திலும் மஞ்சள் நிறத்துடன் தடிப்பு, முகத்தில் எண்ணெய் தடவினதுபோல் பிசிபிசிப்பு, கீல்களில் வீக்கம், நெஞ்சு உலர்தல், சந்நிபாதசுரக் குறிகள் என்னுங்குணங்களை யுண்டாக்கும்.

உதய சுரம் :- சுரமானது உதயகாலத்தில் உண்டாவதுடன் உதயலில்லிடிருத்தல், சந்நிபாதசுர குணங்கள் முதலியவற்றை உண்டாக்கும்.

மத்தியான சுரம் :- சுரமானது மத்தியானத்தில் உண்டாகி பித்தசுர குணங்களுடன் தினவு, அதிகவார்த்தை, அதிமூத்
திரம், நடுக்கல், அதிசீதளம் என்னும் குணங்களையுடையது.

மாலை சுரம் :- சுரமானது மாலைகாலத்தில் பிறந்து சந்நிபாத சுர குணங்களையுடையது.

நிசி சுரம் :- சுரமானது நடு இரவில் உண்டாகி சகல சுரங்களின் குணங்களையுடையது.

சோஷை சுரம் :- சோஷை, தபித்தல், மூர்ச்சை, அதி வேதனை, கண்களில் புகை கம்மலுடன் சலம் வடிதல், தேகஞ் சில்லீடல், வயிற்றில் பொருமலுடன் நோய், சுட்கித்தல், அடிக்கடி மிக மூத்திரம், உரோமச்சிலிர்ப்பு, அக்கினிமந்தம், சுவாசம், படுக்கை பொருந்தாமை, வாந்தி, வாயும் நாவும் உலர்ந்து சிவத்தல் என்னுங் குணங்களையுடையது.

தாபச் சுரம் :- அதிக எரிச்சல், மிகுசீதளம், சலம் அருந்தினும் உலரல், மிகதாகம், மார்பெரிச்சல், நித்திரைபங்கம், பிரலாபம், பலவீனம், சுவாசம், அதிவேதனை என்னுங் குணங்களையுடையது.

விரண சுரம் :- விரணங்களில் பிறந்து அதிசூலையுடன் சர்வாங்க நோயையும், சுரகுணங்களையு முடையது.

ஆதபச் சுரம் :- சித்திரை-வைகாசி-ஆனி-ஆடி இந்த நான்கு மாதங்களில் காலை இரண்டு சாமம் வரைக்கும் நிற்காமல் வழிநடப்பதினால் பிறந்து சாதாரண சுரகுணங்களையுடையது.

ஈனத்தொனி சுரம் :- இது ஈனத்தொனியுடன் சந்நி பாத சுர குணங்களைப் பெற்றிருக்கும்.

அக்கினிமந்த சுரம் :- ஏழுநாள் பத்துநாள் பசிதாகமின்மை, துர்ப்பலம், தேகத்தில் நிறக்குறைவுடன் எரிச்சல், சுட்கல், மலபந்தம், சிலவேளை தாகம், தலைவலி, இருமல், இரைப்பு, அன்னத்தில் வெறுப்பு, அரோசகம், ஏப்பம், வாந்தி, விக்கல், வாய்கசத்தல், இந்திரிய நஷ்டம், முகம்வாடல், கைகால்வலி, அன்றியும் சிலநாளுக்குள்
நானாவிதசுரம், விஷம், சந்நிபாதம், மசூரிகப்பந்தமான் வியாதி பேதி, வாந்தி, அழுகை, என்னுங்குணங்களை யுடையது.

ஏப்பசுரம் :- ஏப்பம், வாந்தி, மார்பெரிச்சல், தலைவலி, நெஞ்சுலர்தல், தேகத்தை திருப்பல் போலுருத்தல், பிரமை,நமச்சலுடன் நடுக்கல், மலபந்தம் என்னுங் குணங்களை யுடையது.

வாந்திசுரம் :- புளித்தரத்த வாந்தி,எரிச்சல், மார்பில் தீபட்டது போல் லெரிச்சல், கண்டத்தியலும், நெற்றியிலும் வியர்வை, பேதியில் சீதளம் விழுதல், மிகுதாகம், துர்ப்பலம், கை கால் குளிர்ச்சி, உடம்பெல்லாம் துவைத்தது போலிருத்தல், நிறக்குறைவு என்னுங் குணங்
களை யுடையது.

கொட்டவிசுரம் :- மிகு கொட்டாவி, கைப்பு, புளிப்பான வாந்தி, தலையிலும், காதிலும் கோயுடன் இரைச்சல், இருந்திருக்க தேகம் நடுக்கல் நெஞ்சிற் கபாதிக்கம் என்னுங் குணங்களை யுடையது.

விக்கல்சுரம் :- அதிக விக்கலுடன் சுரகுணங்களை யுடையது.

அநித்திரை சுரம் :- நித்திரையின்மை, மிகு கூச்சல், அடித்தொடை சதையும், முழங்கால் சதையும் வலித்தல், ஈனத்தொளியான வார்த்தை, சதா இருமல், மூர்ச்சை என்னுங் குணங்களை யுடையது.

காசசுரம் :- சதா இருமல்,சிவந்தும், நுரைத்தும், வெளுத்தும் நானாவிதமாகிய கோழை விழுதல், வியர்வை, மூர்ச்சை, ஏப்பம், பிரமை, தாகம், வாந்தி, தலையிலும், கண்ணிலும்,எரிச்சல், பேதி,வயிற்றுவலி கொட்டாவி, விக்கல் என்னுங் குணங்களை யுடையது.

கட்கசுரம் :- அதிகவெப்பம், தேகமுலரல், சிரசிலும், கண்ணிலும் நோய், வியர்வை, பல்நோய், சவம் போல், கிடத்தல், உரோகசிலிர்ப்பு, அதிநித்திரை, கோபம் என்னுங் குணங்களை யுடையது.

புராணசுரம் :-
இது சுர குணங்களுண்டாகி அதிக நாளாக விடாமல் இருக்கும்.

பஷாந்திரசுரம் :- பஷத்துக் கொருதரம் பிறந்து சீதத்துடன் வெப்பம், தாகம், புத்தியில் ஒன்றும் தோன்றாமை, அசீரணம், அரோசகம், துர்ப்பலம், சரீரம் வெளிறல் என்னுங் குணங்களை யுடையது.

மாதசுரம் :- இது மாதத்திற்கொருமுறை, பிறந்து சகல சுர குணங்களெல்லாம் உடையது.

வருஷசுரம் :- இது வருடத்திற் கொருமுறை பிறந்து சகல சுர குணங்களுண்டாகி இருக்கும்.

கட்டிசுரம் :- சர்வாங்கத்திலும், கடுக்கைபோல் சிறியதாகவும் பெரியதாகவும், கட்டிகள் எழும்புதல், எரிச்சல், தாகம், உடற்சோர்வு, வியர்வை, நா உலர்ந்து முள்ளைப்போலிருத்தல், நித்திரைபங்கம், வாந்தி என்னுங் குணங்களையுடையது.

continued in Part-2  Part-3  Part-4  Part-5  Part-6  Part-7